மாவட்ட செய்திகள்

கச்சிராயப்பாளையம் அருகே, கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் படுகொலை - பெண்கள் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை

கச்சிராயப்பாளையம் அருகே கல்லால் முகத்தை சிதைத்து வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண்கள் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மத்தியகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் வெங்கடேசன் (வயது 30). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். அதன்பிறகு வெங்கடேசன் வெளிநாட்டுக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசன் கள்ளக்குறிச்சிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை மத்தியகுறிச்சி-சடையம்பட்டு இடையே உள்ள கோமுகி ஆற்றில் வெங்கடேசன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதறியடித்துக் கொண்டு கோமுகி ஆற்றுக்கு சென்று, அங்கு பிணமாக கிடந்த வெங்கடேசனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வெங்கடேசனின் உடலை பார்வையிட்டனர்.

அப்போது அவரது முகம் முழுவதும் சிதைந்திருந்தது. அவரது அருகில் கிடந்த கல்லிலும், மணற்பரப்பிலும் ரத்தம் படிந்திருந்தது. மேலும் வெங்கடேசனின் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்து கிடந்தது. இதனால் அவர் கல்லால் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படாமல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே போலீசார் மத்தியகுறிச்சிக்கு சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் வெங்கடேசனுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது என்றும், அதன் காரணமாக அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் வெங்கடேசனை அடித்து கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

இதனால் போலீசார் அந்த பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லால் அடித்து வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்