புளியங்குடி,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேந்திரன். இவர் ரெயில்வேயில் கேட்டரிங் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி வெள்ளையம்மாள் (வயது 27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தற்போது வெள்ளையம்மாளுக்கு சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த வெள்ளையம்மாளை காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்திலும், உறவினர்களின் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை சொக்கம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான கிணற்றில் வெள்ளையம்மாள் பிணமாக கிடந்தார். இதுபற்றி சொக்கம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றிய தகவலின் பேரில் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளையம்மாளின் உடலை மீட்டனர்.பின்னர் வெள்ளையம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 7 ஆண்டுகளே ஆவதால், தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.