மாமல்லபுரம்,
மாமல்லபுரம் மேற்கு ராஜ வீதியில் உள்ளது மல்லிகேஸ்வரர் கோவில். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் அர்ச்சகராக பணியாற்றி வந்தவர் சுரேஷ்கண்ணன் (வயது 30). இந்த நிலையில் வழக்கம்போல் நடைபெறும் கோவில் பூஜைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சுரேஷ்கண்ணன், மாமல்லபுரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எச்சூர் என்ற இடத்தில் செல்லும்போது மாமல்லபுரம் நோக்கி வந்த கார் சுரேஷ்கண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்து
ஊத்துக்கோட்டை அருகே உள்ள கரடிபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் (65). கணவரை இழந்தவர். இவரது பேரன் தேவேந்திரன் (25). நேற்று தேவேந்திரன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பாட்டி பட்டம்மாளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் கிராம எல்லையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கரடிபுத்தூர் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
விபத்துக்குள்ளானதும் கார் டிரைவர் தப்பிச்சென்று விட்டார். இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பட்டம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகிறார்.