மாவட்ட செய்திகள்

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மணப்பாறை அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த டி.உடையாபட்டி மற்றும் ராமகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், இப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆழ்குழாய் கிணறுகள் மூலம் கிடைக்க பெறும் கொஞ்சம் தண்ணீரைத்தான் தங்களின் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது நிலவிவரும் கடுமையான வறட்சியால் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் குடிக்கக்கூட தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, கிராமப்பகுதிகளில் மக்களிடம் குறைகளை கேட்க வந்த தம்பிதுரை, கலெக்டர் ஆகியோரிடம் முறையிட்டும் இதுவரை குடிநீர் தட்டுப்பாடு தீர்க்கப்படவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு மணப்பாறை-வீரப்பூர் சாலையில் டி.உடையாபட்டியில் நேற்று காலை காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று பிடிவாதமாக கூறினர். அதைத்தொடர்ந்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவிரி குடிநீர் முறையாக கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல், 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு