மோகனூர்,
மோகனூர் அடுத்த மணப்பள்ளி ஊராட்சி குன்னிபாளையத்தில், அரசு மணல் குவாரி செயல்படுகிறது. அங்கிருந்து எடுத்துச் செல்லப்படும் மணல், குமாரிபாளையம் ஊராட்சி, ஊனாங்கல்பட்டிமேடு என்ற இடத்தில் இரண்டாம் விற்பனை கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு, லாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரண்டாம் விற்பனை கிடங்கிற்கு வாடகை உயர்த்தி கேட்டதால், இருப்பு வைக்க இடமின்றி, மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதையடுத்து, சின்னபெத்தாம்பட்டி ஊராட்சி, குளத்துப்பாளையத்தில், இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, நேற்று காலை முதல், அரசு மணல் குவாரியில் லாரிகளில் லோடு ஏற்றப்பட்டு, இரண்டாம் விற்பனை கிடங்கு அமைந்துள்ள, குளத்துப்பாளையம் கொண்டு வந்து இருப்பு வைக்கப்பட்டது.
இதற்கு, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாலை பழுதடைந்துவிடும் என்பதுடன், அந்த வழியாக செல்லும் குடிநீர் திட்டக்குழாய், விவசாய நிலங்களுக்கு செல்லும் தண்ணீர் குழாய்கள் சேதம் அடையும் என்பதால், நேற்று காலை 11 மணிக்கு, மணல் கிடங்கில் இருந்து வந்த மணல் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, சாலையை அகலப்படுத்துவதுடன், குடிநீர் குழாய் பழுதடைந்தால், உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.