பெங்களூரு,
ராமநகர் மாவட்டம் பிடதி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் அம்புஜம்மா (வயது 52). இவரது கணவர் நாகண்ணா. இவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து, தனது கணவருக்கு சேர வேண்டிய சொத்துக்களை கொடுக்கும்படி நாகண்ணாவின் அண்ணன் ராமைய்யாவிடம் அம்புஜம்மா கேட்டு வந்தார். ஆனால் அவர் சொத்துக்கள் எதுவும் கொடுக்க முடியாது என்று கூறி வந்தார். இதனால் சொத்து பிரச்சினை காரணமாக அம்புஜம்மாவுக்கும், ராமைய்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பின்னர் ராமைய்யாவின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சேர்ந்து அம்புஜம்மாவுக்கு 2 ஏக்கர் நிலத்தை கொடுத்தனர்.
ஆனால் அந்த நிலம் தனக்கு தான் சொந்தம் என்று கூறி அம்புஜம்மாவிடம் ராமைய்யா தொடர்ந்து சண்டை போட்டு வந்தார். இதுபற்றி சமீபத்தில் பிடதி போலீஸ் நிலையத்தில் ராமைய்யா மீது அம்புஜம்மா புகார் கொடுத்தார். இதையடுத்து, அம்புஜம்மா, ராமைய்யாவை அழைத்து பிடதி போலீசார் சமாதானம் பேசினார்கள். அப்போது அம்புஜம்மாவிடம் சண்டை போடமாட்டேன் என்று போலீசாரிடம் ராமைய்யா கூறினார்.
இந்த நிலையில், கடந்த 23-ந் தேதி தனது வீட்டில் அம்புஜம்மா தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற ராமைய்யா அம்புஜம்மாவிடம் 2 ஏக்கர் நிலத்தை திரும்ப கொடுக்கும்படி கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. அதன்பிறகு, அம்புஜம்மாவின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி ராமைய்யா தீவைத்தாக கூறப்படுகிறது. இதில், அவர் உடல் கருகி உயிருக்கு போராடினார். உடனடியாக அவர் ராமநகரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அம்புஜம்மாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அம்புஜம்மா பரிதாபமாக இறந்து விட்டார்.
இதற்கிடையில், அம்புஜம்மா சாகும் முன்பு தனது சாவுக்கு கணவரின் அண்ணன் (மைத்துனர்) ராமைய்யா, அவரது மனைவி சிவம்மா, பாபு, மஞ்சு, சித்தேகவுடா ஆகிய 5 பேரும் தான் காரணம் என்றும், அவர்கள் தான் தனது உடலில் தீவைத்ததாகவும் போலீசாரிடம் கூறி இருந்ததாக தெரிகிறது. மேலும் சொத்து பிரச்சினை காரணமாக அம்புஜம்மாவை ராமைய்யா தான் உயிருடன் எரித்து கொன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து பிடதி போலீசார், ராமைய்யா உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராமைய்யாவின் மனைவி சிவம்மாவை போலீசார் கைது செய்தனர். அதே நேரத்தில் ராமைய்யா, பாபு, மஞ்சு, சித்தேகவுடா ஆகிய 4 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.