மாவட்ட செய்திகள்

சேலம் அருகே மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் தீ விபத்து - 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

சேலம் அருகே மரம் அறுவை மில் உரிமையாளர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம்,

சேலம் குரங்குச்சாவடி அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன், மர அரவை மில் உரிமையாளர். இவருடைய மனைவி புஷ்பா (வயது 40). அன்பழகன் தனது தம்பி கார்த்தியின்(40) குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். வீட்டின் மாடியில் இவர்களின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு அன்பழகன், அவருடைய மனைவி புஷ்பா, கார்த்தி, அவருடைய மனைவி மகேஸ்வரி (35), இவர்களின் குழந்தைகள் சர்வேஷ்(12), முகேஷ்(10) ஆகியோர் அந்த வீட்டில் உள்ள அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் அவர்களின் வீட்டில் திடீரென தீப்பற்றி பரவியது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பற்றி வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானது.

இதில் வீட்டில் கீழே உள்ள அறைகளில் தூங்கிக்கொண்டு இருந்தவர்களில் அன்பழகன் மட்டும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். வீட்டில் தூங்கிய மற்ற 5 பேரும் தீயில் கருகி பலியானார்கள். அவர்கள் தீயில் கருகி அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், அன்பழகனும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சூரமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோவிந்தன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் மற்றும் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் தீயில் கருகி உயிரிழந்த அனைவரின் உடல்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பயங்கர தீ விபத்து சம்பவம் நள்ளிரவில் சேலத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்