செஞ்சி,
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா தேவி, விஷ்ணுபிரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், செந்தில்குமார் மற்றும் போலீசார் செஞ்சியை அடுத்த வளத்தி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 கார்கள் வந்தன. அந்த கார்களுக்கு பாதுகாப்பாக 3 மோட்டார் சைக்கிள்களில் ஆட்களும் வந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 3 கார்களையும், அவற்றுக்கு பாதுகாப்பாக 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
சோதனையில், அந்த 3 கார்களிலும் புதுச்சேரியில் இருந்து 1,392 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 கார்களிலும், 3 மோட்டார் சைக்கிள்களிலும் வந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
1.பாலகிருஷ்ணன்(வயது 38), கொடுங்கையூர், சென்னை.
2.பாலு(53), ஜாபர்கான்பேட்டை, சென்னை.
3.பாண்டியன்(36),
4.ரஞ்சித்(22),
5.ஷாகுல் அமீது(19), இவர்கள் 3 பேரும் காரைக்காலை சேர்ந்தவர்கள்.
6.ஆனந்தராஜ்(23), பெரியகாட்டுப்பாளையம்.
7.கோ.அஜித்குமார்(24),
8.மதன்(25),
9.ம.அஜித்குமார்,
10.வேலாங்கண்ணன்(28), இவர்கள் 4 பேரும் வளத்தியை சேர்ந்தவர்கள்.
இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இந்த கும்பலை சேர்ந்தவர்கள் வளத்தி அருகே முருகன்தாங்கல்பட்டியில் உள்ள பழைய டயர் குடோனில் போலி மதுபான ஆலையை நடத்தி வருவது தெரியவந்தது.புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை பழைய டயர் குடோனுக்கு கடத்திக்கொண்டு வந்து மதுபாட்டில்களில் உள்ள புதுச்சேரி மாநில லேபிள்களை அகற்றி விட்டு, போலியாக அச்சடிக்கப்பட்ட தமிழ்நாடு மதுபான லேபிள்களை ஒட்டி பல்வேறு இடங்களுக்கு அனுப்பி அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களையும், 3 மோட்டார் சைக்கிள்களையும், 1,392 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.