தலைவாசல்,
தலைவாசல் அருகே உள்ள ஆறகளுர் 4-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து (வயது 42), லாரி டிரைவர். இவருடைய மனைவி தெய்வானை (35). இவருக்கு மோனிஷா (17) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மருதமுத்துவின் மனைவி, தனது மகளுடன் பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டனின் மனைவியும், கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினருமான திவ்யா (27) என்பவரிடம் பேசி கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் இருந்த மருதமுத்து கையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்தார். அவர் அங்கு நின்று கொண்டிருந்த மனைவி-மகள் மீது பெட்ரோலை ஊற்ற முயன்றார்.
அப்போது திவ்யாவும், அவரது 3 வயது மகள் தனுஸ்ரீயும் வீட்டின் வராண்டாவில் இருந்துள்ளனர். வீட்டின் வராண்டாவில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்ததால் மருதமுத்து ஊற்றிய பெட்ரோல் அடுப்பின் மீது பட்டு அங்கும் தீப்பற்றியது. இதில் திவ்யாவும், அவருடைய மகளும், மருதமுத்துவின் மனைவி தெய்வானை, மகள் மோனிஷா ஆகிய 4 பேரும் தீப்பற்றி படுகாயம் அடைந்தனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து தீயை அணைக்க முயன்றனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் 4 பேரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் லாரி டிரைவர் மருதமுத்துவை பொதுமக்கள் பிடித்து தலைவாசல் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மருதமுத்துவை கைது செய்தார். மருதமுத்து கைகளிலும் தீக்காயம் உள்ளது. குடும்பத் தகராறில் மனைவி-மகள் மீது லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.