வையம்பட்டி,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கோவில்பட்டி அருகே கடந்த 25-ந் தேதி சாலையில் இருவர் கையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர்களை பிடிக்க மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆசைத்தம்பி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தொட்டியபட்டி கிராம நிர்வாக அதிகாரி பாண்டியராஜன் வளநாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் நானும், கிராம உதவியாளர் பொன்னையனும் அலுவலகத்தில் இருந்த போது இச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ் (வயது 31), வளநாடு கைகாட்டியைச் சேர்ந்த சங்கர் (29) ஆகியோர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் எங்களிடம் கோவில்பட்டி அருகே காரில் நின்றிருந்த 3 பேரில் இருவர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டு பணம் கேட்டு மிரட்டியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பித்து வந்து விட்டோம். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வளநாடு போலீசார் வழக்கு பதிவுசெய்து துப்பாக்கியை வைத்து பணம் பறிக்க முயன்ற நபர்கள் யார் என்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மினிக்கியூர் பிரிவு சாலை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காரில் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம், கொடும்பாளூர் அருகே உள்ள தேங்காய்திண்ணிப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் (45), ராமரெட்டியபட்டியைச் சேர்ந்த பாலுசாமி (42) எனவும், அவர்கள் தான் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவர்கள் என தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து இரண்டு துப்பாக்கிகள் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சரவணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.