திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ளது புது புளியம்பட்டி. இங்கு ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவுப்படி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் தலைமையில், தாசில்தார் கதிர்வேலு, வருவாய் ஆய்வாளர் சந்தோஷ், கிராம நிர்வாக அதிகாரி தீபா ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பள்ளியின் 2-வது தளத்தில் 9-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்புக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 25-க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பள்ளியை பூட்டி சீல் வைக்க உதவி கலெக்டர் மணிராஜ் உத்தரவிட்டார்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு விதிகளுக்கு எதிராக பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்திய பள்ளியின் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பள்ளி பூட்டி சீல் வைக்கப்பட்டது.