திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருத்தங்கூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான எழுதுப்பொருட்கள், புத்தகங்கள், உணவு தயாரிப்பதற்கான பாத்திரங்கள், பீரோ, மின்விசிறி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிராமக்குழுத்தலைவர் கு.தவசிமணி தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ரா.கோமதி வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அசோகன், துனைத்தலைவர் எம். நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொடக்கக்கல்வி அலுவலர் இன்பவேணி, கூடுதல் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் முத்தமிழன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சூசைரெத்தினம், வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் எஸ்.பாபி, ந.காளிதாஸ், சிறப்பாசிரியர் ம.தேசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சீர்வரிசை பொருட்களை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.