மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் மறியல்

கும்மிடிப்பூண்டி அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்தது ஓபசமுத்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட ஓபசமுத்திரம் கிராமத்தில் உள்ள மண்ணடி தெரு உள்பட 2 தெருக்களில் மொத்தம் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இந்த பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தால் முறையாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் இந்த பகுதி மக்கள் ஏற்கனவே பல முறை புகார் மனு அளித்து உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில், தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்கக்கோரி நேற்று காலை அந்த வழியாக கள்ளூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி சென்ற அரசு பஸ்சை காலி குடங்களுடன்பொதுமக்கள் சிறை பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன், ஆரம்பாக்கம் சப்இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி மற்றும் ஆரம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் பேசி உடனடியாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் தங்களது 2 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்