திருப்பத்தூர்,
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள் ஆ.பிரபு, சிவசந்திரகுமார், சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்கொண்ட களஆய்வில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய 4 நடுகற்கள், ஒரு சதிக்கல் ஒரே இடத்தில் வழிபாட்டில் உள்ளதை கண்டறிந்தனர்.
இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:-
திருப்பத்தூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாதனவலசை கிராமத்தில் வேடியப்பன் கோவில் வளாகத்தில் 4 நடுகற்கள் காணப்படுகின்றன. இங்கு பழமையான எட்டிமரத்தின் அடியில் வலக்கரங்களில் அம்பும், இடதுகரங்களில் வில்லும் ஏந்திய நிலையில் 3 வீரர்கள் காணப்படுகின்றனர்.
இவ்வீரர்கள் மூவரும் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையினை முடிந்துள்ளனர். கழுத்தில் 6 அடுக்குகளை கொண்ட கழுத்தணியினை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டினையும், இடைக்கச்சையுடன் குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும், அணிந்துள்ளனர். இத்தோற்றம் இவர்கள் இங்கு நடைபெற்ற போரில் தலைமையேற்றவர்கள் என்பதை உணர்த்துகின்றன.
இவர்களுக்கு நேர் எதிரே வலக்கரத்தில் கட்டரியும், இடக்கரத்தில் குறுவாளும் ஏந்திய வீரன் ஒருவன் காணப்படுகிறான். சற்று தொலைவில் கையில் மதுக்குடத்துடன் ஒரு பெண் சிற்பமும் இடம் பெற்றுள்ளன. இவை இவ்வட்டாரத்தில் நடைபெற்ற போரில் மடிந்த வீரர்களுக்கான நடுகற்களாகும். கையில் மதுக்குடத்துடன் வீற்றிருக்கும் பெண் வீரர்களில் எவரேனும் ஒருவரது மனைவியாக இருக்கக்கூடும். வீரனோடு அப்பெண்ணும் இறந்த செய்தியை இச்சதிக்கல் அறிவிக்கின்றது.
இங்கு அமைந்துள்ள 4 நடுகற்களில் 3 அளவில் பெரிதாகவும், வரிசையாக அருகருகே நிலை பெற்றுள்ளன. இம்மூன்று கற்களுக்கு எதிராக சிறிய அளவில் ஒரு நடுகல்லும் நடப்பட்டுள்ளது. பொதுவாக கற்களின் அளவானது வீரர்களுக்கான முக்கியத்துவத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
வரலாற்றின் சாட்சிகளாக நிற்கும் இக்கற்கள் ஒருகாலத்தில் மண்ணில் புதையுண்டு இருந்தவையாகும். அண்மையில் நடைபெற்ற கோவில் புதுப்பிக்கும் பணியின் போது, இவற்றை தோண்டியெடுத்து சிற்பிகளின் உதவியோடு நவீன கருவிகளால் மெருகேற்றி இங்கு வைத்துள்ளனர். இந்நடுகற்கள் விஜயநகர பேரரசின் தொடக்க காலத்தை சேர்ந்தவையாக இருக்க கூடும். இந்நடுகற்களை வேடியப்பன் கல் என்றும், அவை அமைந்துள்ள கோவில்களை வேடியப்பன் கோவில் என்றழைப்பதும் வட தமிழகத்தில் பரவலாக காணப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள நடுகற்களை மெருகேற்றியதால் அவற்றின் பழமை தோற்றத்தை இழந்துள்ளன. தொல்லியல் துறையினர் இதுபோன்ற வரலாற்று ஆவணங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.