மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் அருகே கி.பி. 11-ம் நூற்றாண்டை சேர்ந்த வீரராஜேந்திரன் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் அருகே கி.பி.11-ம் நூற்றாண்டை சேர்ந்த வீரராஜேந்திரன் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஆ.பிரபு, வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் வீரராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டினைக் கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் தடயங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு திருப்பத்தூர் அருகிலுள்ள சந்திரபுரம் சுற்றுவட்டாரத்தில் கள ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது அங்குள்ள ஏரிக்கோடி என்ற இடத்தில் ஜெயக்குமார் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் நடுகற்கள் இருப்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தினோம். அங்கே கல்வெட்டு ஒன்றும் இருந்தது. அக்கல்வெட்டானது உடைந்த நிலையில் ஐந்து துண்டுகளாக வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடந்தன. அவற்றை மீட்டு வரிசைப்படுத்திப் படி எடுத்துப் படிக்க முற்பட்டபோது நிலத்தின் உரிமையாளர் அதற்கு அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் தற்போது அவ்வூரில் உள்ள தன்னார்வலர்களின் உதவியோடு அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தோம். 4 அடி அகலமும் 5 அடி உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் 21 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் வீரராஜேந்திர சோழனின் வீரமே துணையாக என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி சுருக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடல் சங்கமம் என்ற இடத்தில் ஆகவமல்லன் என்ற சாளுக்கிய மன்னனை வென்று அவனுடைய மனைவியர், சொத்துக்கள், வாகனங்கள் ஆகியவற்றைக் கைப்பற்றிய செய்தியும், விக்கலன், சிங்கணனை வென்ற செய்தியும், வேங்கை நாட்டைக் கைப்பற்றி தனது முன்னோர்கள் நினைத்ததை நிகழ்த்தி முடித்ததையும் வீரராஜேந்திர சோழனின் இம்மெய்க்கீர்த்தி விவரிக்கின்றது.

கல்வெட்டில் இவ்வூர் சந்திரபுரம் என்றே குறிப்பிடப்படுகின்றது. இவ்வூர் விஜயராஜேந்திர மண்டலத்தில் தகடூர் (தற்போதைய தருமபுரி) நாட்டில் இருந்துள்ளது. வீரராஜேந்திர சோழனின் சேநாபதி மாவலி மும்முடிச் சோழதேசத்து புறமலை நாட்டின் மீது போர்தொடுத்து வந்தபோது இறந்ததாகத் தெரிகிறது. அவனைச் சிறப்பிக்க இவ்வூரில் இருந்த ஏரிக்கு ராஜேந்திர சோழன் ஏரி எனப்பெயரிட்டுள்ளது.

இங்குள்ள நடுகல்லுக்கும், இக்கல்வெட்டு வாசகங்களுக்கும் உள்ள தொடர்பு இதன் மூலம் அறிய முடிகின்றது. கி.பி.11-ம் நூற்றாண்டை சேர்ந்த சோழ மன்னன் வீரராஜேந்திரன் குறித்த வரலாற்றுத் தகவல்களை இக்கல்வெட்டு விவரிக்கின்றது. திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பினை விவரிக்கும் இக்கல்வெட்டு ஆவணம் உடைந்து உள்ளது. ஆகவே மாவட்ட நிர்வாகம் இதனை மீட்டு உரிய முறையில் பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு