விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்த தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலக்குழு உறுப்பினர் முருகேசன் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மத்தியசேனையில் இருந்து கவுண்டம்பட்டி வரை உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், விருதுநகர் ஆத்துப்பாலம் அருகே உள்ள சிவகாசி சாலையை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரி மனு கொடுத்தனர். மேலும் ஆமத்தூரில் இருந்து மீசலூர் செல்லும் சாலையையும் சீரமைக்க கோரி இருந்தனர்.
மாவட்ட நிர்வாகம், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தது. இந்த மனுவுக்கு பதில் அளித்துள்ள விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட என்ஜினீயர், விருதுநகர்-சிவகாசி ரோட்டினை ஸ்ரீவில்லிபுத்தூர்-பார்த்திபனூர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் சேர்த்து 4 மாத காலத்திற்குள் பணியினை முடிப்பதாகவும், மத்தியசேனை முதல் கவுண்டம்பட்டி வரை உள்ள சாலையினை 2018-19-ம் நிதியாண்டிற்கான சாலை மேம்பாட்டு திட்டத்தில் எடுத்து மதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருவதாகவும், பணிகளை தொடங்கி 3 மாத காலத்திற்குள் சாலை சீரமைக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும் ஆமத்தூர்-மீசலூர் சாலை விருதுநகர் யூனியன் சாலை என்றும், சம்பந்தப்பட்ட துறையினை அணுகி நிவாரணம் தேடி கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.