அரியாங்குப்பம்,
புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத்தலமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகுகுழாம் விளங்குகிறது. இங்கு காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். அவர்கள் அங்கிருந்து பல்வேறு வகையான படகுகளில் உற்சாகமாக சவாரி செய்து பாரடைஸ் பீச்சுக்கு சென்று ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து படகு குழாமில் டிக்கெட் எடுத்து, படகு சவாரி செய்தனர். வெளிமாநில சுற்றுலா பயணிகளின் கார், வேன்கள் அதிகளவில் வந்ததால் படகுகுழாம் நுழைவாயிலில் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வீராம்பட்டினம், சின்ன வீராம்பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதியிலும் உள்ளூர் மக்கள் அதிகளவில் திரண்டு காணும் பொங்கலை கொண்டாடினர்.
புதுவையை அடுத்த ஊசுடு ஏரியிலும் உள்ளூர், வெளியூர் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அங்கு படகு சவாரி செய்து, ஏரியின் அழகை ரசித்தனர். 2 படகுகள் மட்டும் இயக்கப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏரி முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதை பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர், சிறுமிகள் ஏரி தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.