காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டம் 2 கோட்டங்கள், 5 வட்டங்கள், 5 ஊராட்சி ஒன்றியங்கள், 5 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி உள்ளடக்கியது. இதில் ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அளவுகோலாக கொண்டு காஞ்சீபுரம் மாவட்டம் முழுமைக்குமான வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளின் வரைபடம் வட்டம், பேரூராட்சி மற்றும் நகராட்சி அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளானவை என கண்டறியப்பட்டுள்ள இடங்களை மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி ஆணையர் நிலையில் குழு தலைவரும், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை போன்ற துறைகளை உள்ளடக்கிய குழுவினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை கலெக்டர் நிலைகளில் பற்றாளர்களும், தொழில்நுட்ப அலுவலர்களும் இந்த குழுக்களை ஒருங்கிணைக்க மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான மேற்பார்வை அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சித்துறை போன்றவற்றின் மூலமாக பாலங்கள், சிறுபாலங்கள், குழாய் பாலங்களை பெட்டக அமைப்பாக மாற்றுதல் மழைநீர் வடிகால் அமைத்தல் விரிவுபடுத்தல் உபரி நீர் கால்வாய்கள், நீர் வரத்து கால்வாய்கள் போன்றவற்றை தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஊராட்சி துறைகளின் சார்பில் நீர் வடிகால் ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகளில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் உபயோகத்தில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு நிறைந்ததாக மாற்ற தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் கவிதா, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.