அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டத்தில், சத்துணவு அமைப்பாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்து வேலை கிடைக்காத சிலர், லஞ்சம் பெற்றுக் கொண்டே புதிய சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தனர். புகாரின் பேரில் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர்களை நேற்று நேரில் அழைத்து தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
தகுதி அடிப்படையில்...
விசாரணை முடிந்த பின் புதிதாக நியமனம் செய்யப்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்தனர். அங்கு அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித் தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் முறையாக விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டோம். நேர்முகத் தேர்வில் எங்களது சான்றிதழ்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் எங்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வழங்கி உள்ளனர். இந்த பணிக்காக நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. எங்களுக்காக எந்த அரசியல் பிரமுகரும் பரிந்துரை செய்யவில்லை.
மிரட்டல்
போதிய தகுதி இல்லாமல் அரசியல்வாதிகளிடம் லஞ்சமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தான் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்துள்ளனர். நாங்கள் சத்துணவு அமைப்பாளராக பொறுப்பேற்று 10 நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் பலரும் எங்களுக்கு போன்செய்து நீங்கள் பணம் கொடுத்துதான் வேலைக்கு சேர்ந்து உள்ளர்கள். உங்கள் வேலையை காலி செய்கிறோம் என்று மிரட்டுகின்றனர். எந்த தவறும் செய்யாத, தகுதியின் அடிப்படையில் மட்டுமே சத்துணவு அமைப்பாளராக பணியில் சேர்ந்துள்ள எங்களுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.