தஞ்சாவூர்,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சையில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை வட்ட துணைத்தலைவர் ஜோதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கோதண்டபாணி, வட்ட இணைச்செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசில் பணிபுரியும் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு 2017-2018ம் ஆண்டிற்கு சிறப்பு மிகை ஊதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்க வேண்டும். பொங்கல் கருணைத்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 2017-2018ம் ஆண்டிற்கு மிகை ஊதியமாக ஒரு மாத கால ஊதியத்தை உச்சவரம்பின்றி வழங்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரூ.7 ஆயிரம் போனஸ் அறிவிக்கப்பட்டு, உச்சவரம்பு தொகையும் ரூ. 7ஆயிரம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான எல்லா சலுகைகளையும் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.