வேலூர்,
வேலூர் பார்வையற்றோர் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வரும் 10 ஆண்டுகளுக்கான உதவித்தொகையை வேலை கிடைக்கும் வரை வழங்கவேண்டும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கவேண்டும். சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வங்கி கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.