பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களுருவில் நேற்று மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் சிலவற்றுக்கு விலக்கு அளிப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பிரதமர் கூறும் ஆலோசனைப்படி ஊரடங்கு தளர்த்தப்படும். மாநில அரசின் நிதிநிலையை பலப்படுத்தும் நோக்கத்தில் மந்திரிகள் ஆலோசனைகள் கூறினர். அந்த ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
ரூ.15 ஆயிரம் கோடி கிடைக்கும்
சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முறைப்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்ததும், இது அமல்படுத்தப்படும். இதன் மூலம் மக்களுக்கும் பயன் கிடைக்கும். மாநில அரசுக்கும் வருவாய் கிடைக்கும். பெங்களூரு வளர்ச்சி ஆணையம் அமைத்துள்ள லே-அவுட்டுகளில் 12 ஆயிரம் கார்னர் வீட்டுமனைகளை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நல்ல சந்தை விலை கிடைத்தால் மட்டுமே விற்பனை செய்வோம்.
தனியார் மற்றும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் லே-அவுட் அமைக்க அனுமதி வழங்கப்படும். கொரோனா பிரச்சினையால் மாநில அரசின் நிதிநிலை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் ரூ.1,000 கோடி உள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி மருத்துவ கல்லூரிகளில் அடிப்படை கட்டுமான வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.45 கோடி நிவாரணம்
குடிசை பகுதிகளில் வழங்கப்படும் இலவச பால் அடுத்த ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக பல்வேறு துறைகள் தனித்தனியாக இணையதள பக்கங்களை உருவாக்கியுள்ளன. அவற்றை ஒரே பக்கத்தில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் 11 மாவட்டங்களில் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.2,834 கோடி நிலுவையில் உள்ளது.
அந்த சர்க்கரை ஆலைகள் உடனடியாக அந்த நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ராய்ச்சூர், கொப்பல் மாவட்டங்களில் ஆலங்கட்டி மழையால் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன. அதற்கு ரூ.45 கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.