மும்பை,
பா.ஜனதா கட்சி முதலில் ஜனசங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. ஜனசங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பா.ஜனதா தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினர். இதேபோல இந்துத்வா கொள்கையை கடைப்பிடித்து வரும் சிவசேனா கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே தனது மாதோஸ்ரீ இல்லத்தில், தீனதயாள் உபாத்யாய் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், துணை முதல்-மந்திரியுமான அஜித்பவாரும், தீனதயாள் உபாத்யாய்க்கு மரியாதை செலுத்தும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில், ஜனசங்க மூத்த தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் சிறிது நேரத்தில் தனது டுவிட்டர் பதிவை அவர் நீக்கி விட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி அஜித்பவாரிடம் கேட்டதற்கு, தற்போது உயிருடன் இல்லாத மனிதர்களின் நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்பதால் நான் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தேன். ஆனால் அரசியல் ரீதியாக, எனது மூத்த தலைவர்களின் பேச்சுக்கு செவிசாய்க்க வேண்டியது உள்ளது என்றார். மற்றப்படி விரிவாக கூற அவர் மறுத்து விட்டார்.
உத்தவ் தாக்கரே அரசு அமைய இருந்த வேளையில் பா.ஜனதாவுடன் திடீரென கைகோர்த்து தேவேந்திர பட்னாவிஸ் அரசு மீண்டும் அமைய காரணமாக இருந்தவர் அஜித்பவார் ஆவார். இந்த அரசு சில நாட்களிலேயே கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.