மாவட்ட செய்திகள்

சாலையில் சென்று கொண்டிருந்த போது தீயில் எரிந்து கார் நாசம் 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

திருமருகல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது தீயில் எரிந்து கார் நாசமடைந்தது. அப்போது காரில் இருந்த 6 பேரும் உடனே கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

தினத்தந்தி

திருமருகல்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டை சேர்ந்தவர் வீரசிம்மன்(வயது58). இவருடைய மனைவி ராஜலெட்சுமி(56). இவர்களது உறவினர்கள் சுந்தரி(40), சுதா(40), சிவச்சந்திரன்(21), குருமூர்த்தி(14). இவர்கள் 6 பேரும் திருமருகல் அருகே திருப்புகலூரில் உள்ள வாஸ்துதலமான அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்று செங்கல் பூஜை செய்து எடுத்து கொண்டு ஒரு காரில் நேற்று மாலை ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருமருகல் அருகே வவ்வாலடி என்ற இடத்தில் கார் சென்றபோது காரிலிருந்து திடீரென புகை கிளம்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காரில் இருந்தவர்கள் உடனே காரில் இருந்து கீழே இறங்கினர். இதன்பின் கண் இமைக்கும் நேரத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்துவிட்டது. மேலும் காரில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவையும் எரிந்து நாசமடைந்தது. காரில் இருந்த 6 பேரும் உடனே கீழே இறங்கியதால் 6 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த திருமருகல் தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். காரில் எப்படி தீப்பிடித்தது? என தெரியவில்லை. இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்