நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வல்வில் ஓரி கலையரங்கில் இளம்வயது திருமணம் தடுத்தல், சட்டப்படி குழந்தைகளை தத்தெடுத்தல், பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
பெண் குழந்தைகளுக்கு 18 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும். அந்த வயதில் தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் குழந்தைகள் திருமணத்தை எதிர்கொள்ள தயாராக முடியும். 18 வயதிற்கு கீழ் பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுப்பது சட்ட விரோதமானதாகும். அவ்வாறு இளம் வயது திருமணம் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் குழந்தைகள் பள்ளி கல்வியோடு நிற்காமல் கல்லூரி படிப்பையும் முடித்து தாங்களே சம்பாதித்து, பொருளாதார தன்னிறைவு பெற வேண்டும். இங்கு உள்ள அனைவரும் தங்கள் பெண் குழந்தையை கல்லூரி படிப்பை முடித்த பின்னர் தான் திருமணம் செய்து கொடுப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும். மலைவாழ் மக்கள் பட்டப்படிப்பு முடித்தால் அரசு வேலை கட்டாயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.