தஞ்சாவூர்,
அ.தி.மு.க.(அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கும், சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் எதிரும், புதிருமாக இருப்பதாக தகவல் பரவியது. இந்தநிலையில் அ.தி.மு.க.(அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா அண்ணன் சுந்தரவதனத்தின் மனைவியும், அ.தி.மு.க.(அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மாமியாருமான சந்தானலட்சுமி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
தஞ்சையில் நடந்த அவரது இறுதி சடங்கில் தினகரனும், திவாகரனும் சகஜமாக பேசி, அருகருகே அமர்ந்தனர். இருவருக்குள் சமரசம் ஏற்பட்டதால் அவர்களது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று பால்தெளிப்பு காரிய நிகழ்ச்சி நடந்தது. இதில் தினகரனும், திவாகரனும் கலந்து கொண்டு அருகருகே அமர்ந்து சகஜமாக பேசினர். பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கு எங்கள் குடும்பம் தடையாக இருப்பதாக சிலர் கருதியதால் 60 நாட்கள் ஒதுங்கி இருப்பதாக தெரிவித்தேன். வருகிற 4-ந் தேதியுடன் கெடு முடிகிறது. அன்றைக்கு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பேன். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்த்து கட்சியை பலப்படுத்தும் வேலையை பொதுச் செயலாளர் சசிகலா ஆணையின்படி செய்வது தான் எனது முதல் பணி.
அம்மாவின் ஆட்சியை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. எனக்கும், திவாகரனுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம். சொந்தபந்தம், கட்சி, நண்பர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக தான் இருக்கிறோம். பத்திரிகை, ஊடகங்கள் தான் இதை பெரிது படுத்துகின்றனர். அமைச்சர்கள் சிலர் எனக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தனர். அவர்களும் நிலைமையை புரிந்து செயல்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சசிகலா தம்பி திவாகரன் கூறியதாவது:-
இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு போன்ற பிரச்சினைகளில் தி.மு.க.வும், கம்யூனிஸ்டு கட்சிகளும் இணைந்து செயல்படுவதால் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்கிறீர்கள். அ.தி.மு.க. பெரிய சக்தி வாய்ந்தது. இதை எதிர்க்க வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் தான் முடியும். எதிர்க்கட்சிகள் இணைவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அ.தி.மு.க.வில் இருந்து ஒரு தொண்டன் கூட வேறு கட்சிக்கு செல்லவில்லை.
1 நிமிடம் போதும் நாங்கள் எல்லோரும் ஒன்றாக எழுந்து நின்றுவிடுவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் நிறைய நலத்திட்டங்கள் ஆடம்பரம் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். பொதுச் செயலாளர் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து இருக்கிறார். அவர் வந்தவுடன் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அடுத்த கட்ட பணி குறித்து முடிவு செய்யப்படும். எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படவில்லை. எல்லோரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் எதிராளி அல்ல. எங்கள் பங்காளி தான். எல்லோரையும் இணைக்க முயற்சி செய்கிறோம். இப்போது ஆறுகுட்டி எம்.எல்.ஏ. வந்து இருக்கிறார். பிரிந்து சென்றவர்கள் ஒவ்வொருவராக வருவார்கள். கட்சியும், ஆட்சியும் நன்றாக போக வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.