மாவட்ட செய்திகள்

சீரான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை: கலெக்டர் தகவல்

வறட்சி நிலவும் நிலையில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுத்து இருப்பதாக கலெக்டர் நடராஜன் கூறினார்.

சாயல்குடி,

கடலாடி தாலுகா கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் 96 பேருக்கு மொத்தம் ரூ.42.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

கடந்த 2 வருடங்களாக போதிய அளவு மழை இல்லாததால் தொடர் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் மாவட்டத்தில் வறட்சி காலத்தில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக மொத்தம் ரூ.10.76 கோடி மதிப்பீட்டில் 311 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளை துரிதப்படுத்தி கூடிய விரைவில் முடிக்க வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.2.66 கோடி மதிப்பில் 76 ஊருணிகள் மற்றும் 77 கண்மாய்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 57 இடங்களில் ரூ.30 லட்சம் மதிப்பில் நீர் செறிவூட்டும் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் மாசுபடாமல் தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி குடிநீர் ஆதாரங்களை வலுப்படுத்துவதற்காகவும் சிறப்பு கவனம்செலுத்தி அதிக எண்ணிக்கையில் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசின் மூலம் விஷன்-2022 திட்டத்தின்கீழ், இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து வரும் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 115 மாவட்டங்களில் தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர்நிலை மேம்பாடு, அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்திறன் பயிற்சி வழங்கி தனிநபர் வருமானத்தை உயர்த்துதல் என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நூறு சதவீதம் தனிநபர் இல்லக்கழிப்பறைகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 429 ஊராட்சிகளில் 413 ஊராட்சிகள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 ஊராட்சிகளும் அதுபோன்று அறிவிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5,665 மற்றும் 4,510 வீடுகள் கட்ட அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில் விரைவில் பணி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து ஏர்வாடி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட தனிநபர் இல்லக் கழிப்பறைகளையும், புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள் கட்டுமான பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். முகாமில் பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மோகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், மாவட்ட சமூகநல அலுவலர் குணசேகரி, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் மாரியம்மாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜா, தாசில்தார் ராஜேசுவரி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் முருகவள்ளி, முத்துராமலிங்கம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் புண்ணியவேல், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்