நெல்லை,
இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பு ஏற்ற உடன், இந்தியாவிற்கு வருமாறு அவருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதை ஏற்று அவர் முதலாவது அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அவருடைய டெல்லி வருகைக்கு ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே நேற்று திராவிட தமிழர் கட்சியினர் தடையை மீறி கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுச்செயலாளர் கதிரவன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சங்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை போலீசார் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அங்கு அனுமதி இல்லாமல் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அந்த கட்சியினர் 11 பேரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.