மாவட்ட செய்திகள்

‘பகவான்’கள் தேவை

ஆசிரியர்கள் சமுதாய சிற்பிகள். என்ஜினீயர், டாக்டர், கட்டிடக்கலை நிபுணர், பட்டய கணக்காளர் என பல்வேறு துறை நிபுணர்களையும் உருவாக்கும் பிரம்மாக்கள்.

தினத்தந்தி

மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கு முன்னால் ஆசிரியர்களை வைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இடத்தை வழங்கி இருக்கிறோம்.

நல்ல விதைதான் நல்ல மரமாகும்; நல்ல மரம்தான் சுவையான சிறந்த கனியை தரும். அதுபோல மாணவ சமுதாயத்தை மிகச்சிறந்த மனித சமுதாயமாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.

ஆசிரியர் பணி ஊதியம் வாங்கும் பணி என்றாலும், அதை தன்னலமற்ற சேவையாக கருதி அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபடும் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு மகத்தான ஆசிரியர்தான் பகவான்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டை அடுத்த வெளியகரம் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், ஒரே நாளில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி, மக்களின் மனதில் இமயமாக உயர்ந்து விட்டார்.

ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகே அருங்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது. கல்விப்பணியில் இது வழக்கமான நடைமுறைதான் என்றாலும், வெளியகரம் பள்ளி மாணவ-மாணவிகள் அவரை சூழ்ந்துகொண்டு தங்களை விட்டு போகக்கூடாது என்று கூறி கட்டிப்பிடித்து கதறி அழுததும், அந்த அன்பின் சுமையை தாங்க முடியாமல் பகவானும் உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் சிந்தியதும் இதுவரை எங்கும் நடக்காத ஒரு சம்பவம். ஆசிரியர்-மாணவர்கள் இடையேயான பரஸ்பர அன்பையும், பற்றுதலையும், அக்கறையையும் பறைசாற்றிய நெகிழ்ச்சியான தருணமாக இது அமைந்தது.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் ஒட்டுமொத்த இந்தியாவே பகவானை நோக்கி திரும்பியது. பிரபல இசைஅமைப்பாளார் ஏ.ஆர்.ரகுமான், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், நடிகர் விவேக் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் ஆசிரியர் பகவானுக்கு தங்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

மாணவர்கள்-பெற்றோரின் வற்புறுத்தலை தொடர்ந்து ஆசிரியர் பகவானின் இடமாறுதலை கல்வித்துறை ரத்து செய்து, அந்த பள்ளியிலேயே பணியாற்ற அனுமதித்து இருக்கிறது.

ஆசிரியர்-மாணவர் உறவு பாடபுத்தகத்தோடு நின்றுவிடுவது இல்லை; அதற்கு மேலும் உள்ளது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குபவர் ஆசிரியர் பகவான்.

ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியராக மட்டும் அல்லாமல் ஒரு சகோதரனாக இருந்து தாயினும் சாலப்பரிந்து அவர்களுக்கு கல்வியை போதிக்கிறார். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களை நல்வழிப்படுத்துகிறார்.

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் பொம்மராஜுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் பகவானின் தந்தை கோவிந்தராஜ் நெசவுத் தொழிலாளி. தாயார் தெய்வானை ஆந்திர மாநிலம் அம்மபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். பகவானின் அண்ணன் ராஜேஷ் பெங்களூருவில் பிளம்பராக வேலை பார்க்கிறார். தம்பி யோகராஜ் எம்.ஏ. படித்து வருகிறார். சகோதரி சுதா திருமணம் முடிந்து அம்மபள்ளியில் கணவருடன் வசித்து வருகிறார்.

மாணவர்களுக்கும் தனக்கும் இடையேயான உறவை ஆசிரியர் பகவான் பகிர்ந்து கொண்டார்... அவர் கூறியதாவது:-

சாதாரணமாக ஆசிரியர் என்பவர் உயர்ந்த இடத்தில் இருப்பவர் போலவும், மாணவர்கள் அவரை தூரத்தில் இருந்து பார்த்து பேச வேண்டும் என்பது போன்ற முறையை நான் கடைபிடிக்கவில்லை. இங்கு படிக்க வரும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்களே.

ஆங்கிலம் என்பது கற்றுக்கொள்ள மிகவும் கஷ்டமான மொழி என்ற எண்ணத்தை நாம் மாற்றவேண்டும். இதற்காக வகுப்பறையில் நான் புத்தகத்தை கையில் எடுத்து பாடம் நடத்தாமல் அன்றைக்கு நடத்த இருக்கும் பாடத்தை கதை சொல்வது போல் கூறி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் விளக்குவேன். மாணவர்களுக்குள் சிறு சிறு குழுக்களை அமைத்து சந்தேகங்களை அவர்களே கலந்துரையாடி தீர்த்துக் கொள்ள வகை செய்தேன். அந்த குழுக்கள் இடையே வினாடி-வினா போட்டி நடத்தி அவர்களை ஊக்குவித்தேன்.

மாணவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் நான் ஒரு நண்பனைப்போல்-சகோதரனைப்போல் அவர்களுடன் பழகுகிறேன். அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவதோடு, உணவையும் நாங்கள் பரிமாறிக் கொள்வது உண்டு. தவறு செய்யும் மாணவர்களை பலர் முன்னிலையில் தண்டிக்காமல், அவர்களை தனிமையில் அழைத்து அறிவுரை வழங்குவேன்.

என்னுடைய இந்த அணுகுமுறையால்தான் மாணவர்களுக்கும் எனக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்ததாக கருதுகிறேன். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை கடமையாக மட்டும் கருதாமல், அவர்களுடைய நலனுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.

இவ்வாறு கூறிய பகவானின் வார்த்தைகளில், மாணவ சமுதாயத்தின் மீதான ஈடுபாடும் அக்கறையும் வெளிப்பட்டது.

நாட்டில் இப்படி எத்தனையோ பகவான்கள் இருக்கிறார்கள். அவர்கள் வணக்கத்துக்கும், பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்கள். இன்னும் நிறைய பகவான்கள் உருவாக வேண்டும்.

ஆசிரியர்கள் எல்லோருமே பகவான்களாக வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை.

அண்ணனான ஆசிரியர்

தேனி அருகே அய்யனார்புரம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயராஜை மாணவ-மாணவிகள் யாரும் சார் என்றோ, ஐயா என்றோ அழைப்பது இல்லை. வாய் நிறைய அண்ணா... அண்ணா... என்றே அழைக்கின்றனர்.

புத்தகத்துக்கு வெளியிலும் கல்வி இருக்கிறது என்பதை உணர்த்தி, கல்வியோடு இணைந்து பல கலைகளையும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

வகுப்பறைக்குள் மாணவ-மாணவிகள் குழுவாக சேர்ந்து பாடம் படித்தல், கலந்துரையாடலுக்காக சிறிய மேஜைகள் வைக்கப்பட்டுள்ளன. அமர்வதற்காக சிறு, சிறு பஞ்சு மெத்தை இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பஞ்சு மெத்தை இருக்கையில் அமர்ந்துகொண்டு மாணவ, மாணவிகள் பாடம் படிக்கின்றனர். எளிமையாகவும், பாடங்களை புரிந்தும் படிக்கும் வகையிலும் கற்றல் அட்டைகள், கல்வி உபகரணங்கள் போன்றவை புதிது, புதிதாய் உருவாக்கப்பட்டு வகுப்பறை முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன.

பள்ளியில் மாணவ நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு, சுகாதாரத்துறை, கல்வித்துறை, பண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை என 4 துறை அமைச்சர்களாக மாணவ, மாணவிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். புத்தகங்களை கடந்து கதை சொல்லுதல், பொம்மலாட்டம், நாடகம் நடித்தல், பள்ளிச்சுவரில் ஓவியம் வரைதல் என தனித்திறமைகளிலும் மாணவ, மாணவிகள் சிறந்து விளங்குகின்றனர்.

ஆசிரியர் விஜயராஜ் கூறியதாவது:-

எனது மனைவி கோவிந்தம்மாள் மின்வாரிய ஊழியராக வேலை பார்க்கிறார். பூர்வபூஜிதன், நிகரமைவன் என இரு மகன்கள். பூர்வபூஜிதன் 3-ம் வகுப்பும், நிகரமைவன் 1-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

நான் வேலை பார்க்கும் பள்ளியிலேயே மகன்களை சேர்க்க வேண்டும் என்று சொன்ன போது முதலில் எனது மனைவி சம்மதிக்கவில்லை. இருவரும் சம்பாதிப்பதால் தனியார் பள்ளியில் படிக்க வைக்கலாம் என்றார். பின்னர், என் மீதுள்ள நம்பிக்கையில் சம்மதித்தார்.

ஆசிரியரை மையப்படுத்திய கற்றலை விட மாணவர்களை மையப்படுத்திய கற்றல் தான் சரியாய் வரும் என்பதால், மாணவர்களின் மனநிலையை புரிந்துகொண்டு வகுப்பறையில் உற்சாகம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்கிறேன். உழைப்பு என்றைக்கும் வீண் போகாது. தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர் இந்த ஆண்டு எங்கள் பள்ளியில் சேர்த்துள்ளனர். தற்போது 23 பேர் படிக்கின்றனர். இந்த ஆண்டு 11 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் பிற பள்ளிகளில் இருந்து விலகி, இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பணியிட மாறுதல் பெறாத தலைமை ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ.ஆர்தர் (வயது 49). திண்டுக்கல் கோபால்நகரில் வசிக்கும் இவர். தினமும் 27 கி.மீ. தூரம் பயணம் செய்து பள்ளிக்கு செல்கிறார். கடந்த 9 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

அவர் விவரித்து கூறியதாவது:-

நான் கடந்த 1995-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியை தொடங்கினேன். கடந்த 2005-ம் ஆண்டு நிலக்கோட்டை அவையம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனேன். இதையடுத்து 2010-ம் ஆண்டு அம்மையநாயக்கனூர் பள்ளிக்கு வந்தேன்.

எங்கள் பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வியை செயல்படுத்துகிறோம். தனியார் பள்ளிகளை விட எங்கள் மாணவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கற்பித்தலில் சிறப்பு கவனம் செலுத்துவோம். ஒவ்வொரு மாணவருக்கும் தனிக்கவனம் செலுத்துவோம். வாசித்தல், எழுதுதலில் கூடுதல் கவனமாக இருப்போம். மேலும் ஆங்கிலத்தில் கடினமாக சொற்களை தமிழ் விளக்கத்துடன் அச்சடித்து கொடுத்துள்ளோம்.

தனியார் பள்ளிகளை போன்று எங்கள் பள்ளி மாணவர்களும் டை, பெல்ட் அணிந்து மிடுக்காக வருவார்கள். அதுவும் பெற்றோரை கவர்ந்து விடுகிறது. மேலும் மாணவர்களின் ஆர்வத்துக்கு ஏற்ப பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம், பேச்சு என பயிற்சி அளிக்கிறோம். இதனால் பல்வேறு போட்டிகளில் மாணவர்கள் பரிசுகளை குவித்துள்ளனர்.

மாணவர்கள் அன்றாட விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக ரெயில் நிலையம், தபால் நிலையம், வங்கிகளுக்கு அழைத்து சென்று அங்கு என்னென்ன பணிகள் நடக்கின்றன என்று விளக்குவோம். மேலும் ரெயில் டிக்கெட் எடுத்தல், சேமிப்பு கணக்கு, மணியார்டர் உள்ளிட்ட சேவைகள் பற்றி கற்றுக்கொடுக்கிறோம். ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று ஊராட்சி தலைவரின் பணிகள், பொதுமக்களின் உரிமைகள் குறித்து சொல்லி கொடுக்கிறோம்.

நான் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றபோது, இந்த பள்ளியின் நிலைமை மிகவும் சாதாரணமாக இருந்தது. பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதோடு, மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தில் தனிக்கவனம் செலுத்துகிறோம். இதற்கு எனது சக ஆசிரியைகள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். நான் சாதாரண கிராமத்தை சேர்ந்தவன். எனவே, கிராமமக்கள் அனைவரிடமும் பழகி நன்கு அறிமுகமாகி விட்டேன். இதனால் மாணவர்கள் நலனில் தானாகவே அக்கறை அதிகமாகி விட்டது. மேலும் வாட்ஸ்அப் குழு அமைத்து அதில் ஆசிரியைகள், மாணவர்களின் பெற்றோர் அனைவரையும் இணைத்துள்ளேன்.

இதன் மூலம் மாணவர்களின் பிறந்தநாள், கல்வி மற்றும் விளையாட்டு உள்பட எந்த பிரிவில் சாதனை படைத்தாலும் வாழ்த்துகளை பதிவு செய்வோம். இதனை பெற்றோர் அனைவரும் பார்த்து விடுவார்கள். இது அவர்களுக்கு ஒரு உந்துதலாக இருப்பதோடு, வெளிப்படை தன்மையை உணர்கிறார்கள். எனவே, பெற்றோர்கள் உரிமையுடன் எங்களிடம் பழகுகிறார்கள். நல்ல மதிப்பும், மரியாதையையும் அளிக்கிறார்கள்.

அதோடு நான் உள்பட எந்த ஆசிரியைகளும் வேறு ஊருக்கு பணி மாறுதலில் செல்லக்கூடாது என்று அன்பு கட்டளையிட்டு இருக்கிறார்கள். எனவே, நானும் ஆசிரியைகளும் பணியிட மாறுதலில் செல்லாமல் இங்கேயே பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

மேற்கண்டவாறு தலைமை ஆசிரியர் ஆர்தர் கூறினார்.

மண்டியிட்டு வணங்கி படிக்கச் சொல்லும் தலைமை ஆசிரியர்

விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் கீழ்பெரும்பாக்கத்தைச்சேர்ந்த 56 வயதான த.பாலு. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பாலு பொறுப்பேற்ற பிறகு மாணவர்களை நல்வழிப்படுத்துவதோடு அவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதாவது பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் யாரும் வெளியே செல்லக்கூடாது, மாலையில் பள்ளி முடிந்த பிறகும் ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

மேலும் சரியாக படிக்காத மாணவர்களையும், தலைமுடியை அதிகமாக வளர்த்தல் உள்ளிட்ட பல ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கு நற்பண்புகளை போதிக்கும் வகையில் அந்த மாணவர்கள் முன்பு தலைமை ஆசிரியர் பாலு, மண்டியிட்டு தனது இரு கைகளையும் கூப்பி வணங்கியவாறு சிறந்த முறையில் படிக்கச் சொல்வதோடு வருங்காலத்தில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று நன்னெறிகளை பின்பற்றி வாழ்க்கையில் உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் என்று அறிவுரை வழங்கி வருகிறார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை