உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் ஒன்றான உடன்குடி பகுதியில் ஆண்டுதோறும் மழைப்பொழிவு குறைந்து கொண்டே வருகிறது. கருப்புக்கட்டிக்கு பெயர் பெற்ற உடன்குடியானது முன்பு வெற்றிலைக்கும் சிறப்பு பெற்றது. பின்னர் மழை அளவு குறைந்ததாலும், உடன்குடி பகுதியில் உள்ள தாங்கைகுளம், தருவைகுளம், சடையநேரி குளம் போன்றவற்றுக்கு சீராக தண்ணீர் வராததாலும், நிலத்தடியில் கடல்நீர் மட்டம் உட்புகுந்து உவர்ப்பாக மாறியது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் முருங்கை, தென்னை ஆகியவற்றையே பயிரிட்டு உள்ளனர். சிலர் கிணற்று நீர் பாசனம் மூலம் வாழை பயிரிடுகின்றனர்.
வாடி வதங்கிய பனை மரங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிக்கிறது. அவ்வப்போது மேகமூட்டமாகவும் காணப்படுகிறது. ஆனால் உடன்குடி பகுதியில் பகல் நேரங்களில் கோடையை மிஞ்சும் வகையில், கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. காலை முதல் மாலை வரையிலும் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள் வெளி இடங்களுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
விவசாயிகள் பயிரிட்ட பயிர்களும் போதிய தண்ணீரின்றி கருகும் நிலை உள்ளது. நிலத்தடி வரையிலும் வேரூன்றி வளரும் கற்பக தருவான பனை மரங்களும் கடும் வறட்சியால் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
உடன்குடி-குலசேகரன்பட்டினம் ரோடு, திசையன்விளை ரோடு, செட்டியாபத்து ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனை மரங்களின் உச்சி ஓலைகள் வரையிலும் கருக தொடங்கி உள்ளன. இதனால் பருவமழையை எதிர்பார்க்கும் மக்களைப் போன்றே, விவசாய பயிர்களும், பனை மரங்களும் வாடி வதங்கிய நிலையில் உள்ளன.