பழனி:
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி உலக பிரசித்தி பெற்றது. இங்கு திருவிழாக்கள் மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்களில் ஒன்றான பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
கோவில் நிர்வாகம் சார்பில், அடிவாரத்தில் பஞ்சாமிர்த தயாரிப்பு கூடம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் கோவில் நிர்வாகம் சார்பில் மலைக்கோவில், அடிவாரம், பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழனி கோவில் பஞ்சாமிர்தம் மிகவும் பிரசித்தி பெற்றது. எனவே பழனி கோவில் பஞ்சாமிர்தத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. மேலும் பழனி கோவிலில் மாலை 5.50 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜைக்கு பின் அனைத்து பக்தர்களுக்கும் கோவில் சார்பில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது. அதன்படி பழனியில், அனைத்து பக்தர்களுக்கும் கோவில் பிரசாதமாக பஞ்சாமிர்தம் வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர் ஒருவருக்கு பேப்பர் கப்பில் தலா 40 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து தயாரிப்பு பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது என்றார்.