மாவட்ட செய்திகள்

பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை: சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம்

மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தினத்தந்தி

தளி,

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோவிலும், பஞ்சலிங்க அருவியும் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்கவும், குளித்து மகிழவும், அமணலிங்கேஸ்ரர் கோவிலில் தரிசனம் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அங்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பஞ்சலிங்க அருவிக்கு மேற்குதொடர்ச்சி மலை பகுதி களில் உள்ள கொட்டை ஆறு, பாரப்பட்டி ஆறு, வண்டி ஆறு, குருமலை ஆறு, கிழவிபட்டி ஆறு, உப்புமண்ணம்பட்டி ஆறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்தது. இதனால் ஆறுகள் மூலமாக பஞ்சலிங்க அருவிக்கு கணிசமான அளவு நீர்வரத்து ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து வந்தனர். அதன்பின்னர் மலைப்பகுதியில் மழை குறைந்து அருவிக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரும் நின்று போனது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. அதேபோல் பஞ்சலிங்க அருவியிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பஞ்சலிங்க அருவியில் குளிக்க வனத்துறையினர் நேற்று தடை விதித்தனர். இதனால் பஞ்சலிங்க அருவிக்கு குளிக்க சென்ற பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அத்துடன் அருவியின் நீர்வரத்தை வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் இணைந்து இரவு-பகலாக கண்காணித்து வருகின்றனர்.

எனவே திருமூர்த்தி மலைக்கு வந்த சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் கோவில் அருகே செல்லும் பஞ்சலிங்க ஆற்றில் வரும் தண்ணீரை பார்த்து மகிழ்ந்தனர். பின்னர் மும்மூர்த்திகளை தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர். மேலும் சாரல் மழை காரணமாக திருமூர்த்தி மலைப்பகுதி ஜில் என்ற சீதோஷ்ண நிலை நிலவுவதால், கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு