கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சரக்கு வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் தினேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெய்சிங், அமீர் அகமது, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பேசும்போது கூறியதாவது:-
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களில் டிரைவர், கிளனர் மட்டுமே இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை இறக்கிவிட்டு வரும்போது, பயணிகளை ஏற்றி வரக்கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
லாரி உரிமையாளர்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள், கிளனர்களுக்கு அடையாள ஆவணங்கள் வழங்கினால், அதனை சான்றிதழ் போல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் போலீசார், சுகாதாரத்துறையினரிடம் அவர்கள் சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். சான்றிதழில் குறிப்பிடப்படாத நபர்களை வாகனத்தில் அழைத்து செல்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வாகன டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து எக்காரணத்தை கொண்டும் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று உரிமையாளர்கள், டிரைவர்கள் உறுதி அளித்தனர்.