மாவட்ட செய்திகள்

பெரியகுளம் முன்னாள் ஆர்.டி.ஓ.விடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தீவிர விசாரணை

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட வழக்குகள் தொடர்பாக பெரியகுளம் முன்னாள் ஆர்.டி.ஓ. ஆனந்தியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

தினத்தந்தி

தேனி:

அரசு நிலம் அபகரிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்களை அரசு அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க. பிரமுகர் உள்பட தனிநபர்கள் சிலர் அபகரித்தனர். பின்னர் அந்த நிலம் தொடர்பான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் அரசு நிலமாக மாற்றப்பட்டது.

இந்த மோசடி குறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் கொடுத்த புகாரின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.க்களாக பணியாற்றிய ஜெயப்பிரிதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஷ்கண்ணன், பெரியகுளம் முன்னாள் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், முத்துவேல்பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 இடங்களில் நடந்த மோசடி தொடர்பாக தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஆர்.டி.ஓ.விடம் விசாரணை

இந்த வழக்கில் அன்னப்பிரகாஷ், பிச்சைமணி, அழகர் ஆகிய 3 பேர் கடந்த 2-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பாக பெரியகுளம் முன்னாள் ஆர்.டி.ஓ. ஆனந்தியை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, ஆர்.டி.ஓ. ஆனந்தி நேற்று தேனி சி.பி. சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி ஆகியோர் 2 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

கணினி மூலம் ஆவணங்களில் திருத்தம் செய்ய ஆர்.டி.ஓ.வுக்கு வழங்கப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தி திருத்தம் செய்யப்பட்ட சம்பவம் உள்பட பல்வேறு ஆவணங்கள் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. தரப்பில் பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அதற்கு அவர் அளித்த பதில்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டன. பின்னர் மீண்டும் அழைத்தால் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறி ஆனந்தியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சில அரசு அதிகாரிகளிடமும் அடுத்தடுத்து விசாரணை நடத்த சி.பி. சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு