தேனி,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு வழிகாட்டுதல் வழங்குவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மூவர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுக்கு உதவியாக அணையின் நீர்மட்ட உயர்வு, கசிவு நீர் அளவுகளை கணக்கிட்டு அவ்வப்போது தகவல் கொடுப்பதற்காக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. மூவர் குழுவின் உத்தரவுப்படி துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் ஆய்வு செய்வது வழக்கம். கடைசியாக கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழைக் காலம் என்பதால் அணையை ஆய்வு செய்ய துணை கண்காணிப்பு குழுவிற்கு மூவர் குழு உத்தரவிட்டது. அதன்பேரில், மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் நேற்று ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக்காக துணை கண்காணிப்பு குழுவின் தலைவர் ராஜேஷ், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு புறப்பட்டுச் சென்றனர். கேரள பிரதிநிதிகளான நீர்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜார்ஜ்டேனியல், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் வல்லக் கடவு வழியாக ஜீப் மூலம் அணைக்கு சென்றனர்.
சுமார் 1 மணி நேரம் அணையில் இந்த குழுவினர் ஆய்வு செய்தனர். அணையின் கசிவுநீர் சுரங்கம், பேபி அணை, மதகு பகுதி ஆகிய இடங் களுக்கு சென்று பார்வையிட்டனர். கசிவுநீர் அளவை கணக்கிட்டனர்.
பின்னர் இந்த குழுவினர் ஆய்வை முடித்துக் கொண்டு தேக்கடிக்கு திரும்பினர். பின்னர் குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழுவின் அலுவலகத்தில் துணை கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டம் முடிந்த பிறகு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக துணை குழுவினரிடம் கேட்ட போது, மூவர் கண்காணிப்பு குழுவினர் விரைவில் அணையில் ஆய்வு செய்ய உள்ளனர். அதற்கான முன்னோடி ஆய்வாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தின் போது, பேபி அணையை பலப்படுத்தும் பணிக்காக கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பெரியாறு புலிகள் காப்பகத்தில் விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. கேரள பிரதிநிதிகள் தரப்பில், அணையில் பணியாற்றும் போலீசார் ஜீப்பில் செல்வதற்கு வசதியாக அணையில் ஒரு மதகை திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக மூவர் குழுவுக்கு அறிக்கை அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றனர்.