கரூர்,
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க அரவக்குறிச்சி வட்ட கிளை மற்றும், புகளூர் வட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், இயற்கை இடர்பாடுகள் காலங்களில் சிறப்பு படி வழங்க வேண்டும், இரவு காவலர் பணியை நிறுத்த வேண்டும், கிராம உதவியாளர்கள் ஓய்வு பெறும்போது கடைசியாக பெரும் ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்கள் பணியை தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்ய வேண்டும், ஜமாபந்தி சிறப்பு படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. இதில் மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், ஆராயி, மாவட்ட பொருளாளர் நாகராஜ், அரவக்குறிச்சி வட்ட செயலாளர் பரமேஸ்வரி, புகளூர் வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.