மாவட்ட செய்திகள்

குடிநீர், உணவில் கொடிய ரசாயனம் கலந்து பொதுமக்களை கொல்ல சதி கைதான ஐ.எஸ். பயங்கரவாதிகள் பற்றி திடுக்கிடும் தகவல்

கைதான ஐ.எஸ். பயங்கரவாதிகள் மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் குடிநீர், உணவில் கொடிய ரசாயனம் கலந்து பொதுமக்களை கொல்ல சதி திட்டம் தீட்டியிருந்த திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் சிலர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர்கள் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டு இருப்பதாகவும் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஒரு சிறுவன் உள்பட 9 பேரை மராட்டிய பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 22-ந் தேதி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த 9 பேருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தானே மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களை சேர்ந்த அவர்கள் மோஷின் சிராஜூதின் கான், தாக்யு சிராஜூதின் கான், முசாகித் உல் அஸ்லாம், முகமத் சர்பராஸ், சல்மான் சிராஜூதின் கான், சமான் குதேபாத், பாகத் அன்சாரி மற்றும் ரஷீத் மல்பாரி என்பது தெரியவந்தது. மற்றொருவன் 17 வயது சிறுவன்.

கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் என்ஜினீயர்கள். ஒருவர் மருந்து துறையில் பணியாற்றி வந்துள்ளார். 17 வயது சிறுவன் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இவர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைதானவர்களில் அவுரங்காபாத்தை சேர்ந்த ரஷீத் மல்பாரி, நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளி ஆவான். பிடிபட்ட வர்களிடம் நடத்திய சோதனையில் ஹைட்ரஜன் பெராக்சைட் என்ற ரசாயனம் அடங்கிய பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து ரசாயன பொடிகள், 6 கத்திகள், 24 செல்போன்கள், 6 லேப்டாப்கள், 6 பென்டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்கள் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சி மற்றும் திருவிழாக்களை குறிவைத்து அங்கு வினியோகிப்படும் குடிநீர் மற்றும் உணவில் கொடிய ரசாயனத்தை கலந்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்பமேளா நிகழ்ச்சியிலும் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தாக்குதலுக்கு பின்னர் வெளிநாடு தப்பி செல்ல ஏதுவாக அவர்கள் பாஸ்போர்ட்டை தயாராக வைத்திருந்துள்ளனர். அந்த பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிடிபட்ட அனைவரும் அவுரங்காபாத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை வரும் பிப்ரவரி 5-ந் தேதி வரை போலீஸ் காவலில் ஒப்படைத்து உத்தரவிட்டது. கைதான சிறுவன் சிறார் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்