மாவட்ட செய்திகள்

கோவில் வாசலில் கஞ்சா விற்ற சாமியார் கைது

ஐஸ்-அவுஸ் கோவில் வாசலில் கஞ்சா விற்ற சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

சென்னை மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் ஐஸ்-அவுஸ் பகுதிகளில் முக்கியமான கோவில்களின் வாசலில் அமர்ந்து சாமியார் ஒருவர் பிச்சை எடுப்பது போல கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி கமிஷனர் லட்சுமணன் மேற்பார்வையில், ஐஸ்-அவுஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படை போலீசார், அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஐஸ்-அவுஸ், இருசப்பன் தெருவில் உள்ள முருகன் கோவில் அருகில் சாமியார் ஒருவர் பிச்சை எடுப்பது போல அமர்ந்திருந்தார்.

அவரிடம் மாறு வேடத்தில் இருந்த போலீசார் கஞ்சா பொட்டலங்கள் இருக்கிறதா? என்று கேட்டனர். உடனே அவர் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலங்களை எடுத்து கொடுத்தார். அவரை மாறு வேட போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் தாமு என்ற சேகர் (வயது 50). ராயப்பேட்டை யானைகுளம் பகுதியைச் சேர்ந்தவர். அவர் சாமியார் கோலத்தில் காவி உடை, ருத்ராட்சம் அணிந்து கோவில் வாசல்களில் அமர்ந்து, பிச்சை எடுப்பது போல கஞ்சா பொட்டலங்களை விற்று வந்துள்ளார்.

அவருக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராஜா (55), ஆண்டிப்பட்டி, தர்மராஜபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி (41) ஆகியோரும் கைதானார்கள். கைதான 3 பேர்களிடம் இருந்தும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு