தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் எழுந்தனர். அவர்கள், 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் கிடைக்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. காப்பீடு தொகை வழங்குவதில் மோசடி நடந்து உள்ளது என்று கூறினர்.
தொடர்ந்து அவர்கள் கலெக்டர் இருக்கை முன்பு திரண்டு சென்று முற்றுகையிட்டனர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு பலமுறை கலெக்டர் அறிவுறுத்தினார். ஆனாலும் அவர்கள் முற்றுகையை கைவிட மறுத்து தொடர்ந்து சத்தமாக கோரிக்கை விடுத்ததால், கலெக்டர் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். சுமார் 10 நிமிடத்துக்கு பிறகு மீண்டும் கலெக்டர் கூட்டத்துக்கு வந்தார்.
தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது கூறியதாவது:-
விவசாயிகள் பாதிப்பு
உளுந்து ஒரு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அரசு ஏதேனும் ஆதார விலை நிர்ணயம் செய்து உள்ளதா?, அப்படி செய்து இருந்தால், அதற்கு குறைவாக உளுந்தை வாங்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விளாத்திகுளத்தில் ஊடுபயிரான வெங்காயம் சேதம் அடைந்து இருப்பதாக கூறி காப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், முதன்மை பயிரான மிளகாய் பயிர் சேதத்துக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளத்தை தூர்வார...
தென்னை மரங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்கு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த ஆண்டு 1 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு பிரிமியமாக சுமார் ரூ.9 கோடி செலுத்தி உள்ளனர். தற்போது பயிர் சேதத்துக்கு ரூ.217 கோடி வரை காப்பீட்டு தொகை கோரப்பட்டு உள்ளது. இந்த பணத்தை இன்சூரன்சு நிறுவனம் விரைந்து வழங்க வேண்டும். தவறினால், மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இன்சூரன்சு நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் குளம் மேம்பாட்டுக்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.3 கோடியே 70 லட்சம் மீதம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த நிதியில் இருந்து குளத்தின் தென்கரை ரோட்டை சரி செய்து, குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாசரேத் குளத்துக்கு...
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து கடலுக்கு செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் அமைக்க வேண்டும். வெள்ளூரில் இருந்த நாசரேத் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லப்பநாயக்கன் குளத்துக்கு கடம்பா குளத்தில் இருந்து புறவழிக்கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
கலெக்டர்
இதற்கு பதில் அளித்து கலெக்டர் வெங்கடேஷ் பேசும் போது, மாவட்டத்தில் இதுவரை 496.88 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது இயல்பான மழையை விட 165.32 மில்லி மீட்டர் குறைவு ஆகும். மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 399 எக்டர் பரப்பில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 491 விவசாயிகள் ரூ.9 கோடியே 5 லட்சம் பிரிமியம் செலுத்தி உள்ளனர். ஏற்கனவே வரப்பெற்ற பயிர்க் காப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. 2016-17-ம் ஆண்டுக்கான மானாவாரி பயிர்களுக்கான காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளூரில் இருந்து நாசரேத் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு நிலம் தந்தால் 10 நாட்களில் பணிகள் முடிக்கப்படும் என்று கூறினார்.
ஆழ்வார்திருநகரியில் தடுப்பணை
கூட்டத்தில் அதிகாரிகள் பேசும் போது, 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிடைக்கும். இதில் மிளகாய், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, நெல்-3 ஆகிய பயிர்களுக்கான காப்பீட்டு தொகை வழங்கப்படும். கோரம்பள்ளம் குளம் மேம்படுத்தும் திட்டத்தில் மீதம் உள்ள நிதி மூலம் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். கடலுக்கு வீணாக தண்ணீர் செல்வதை தடுக்க ஆழ்வார்திருநகரி அருகே தடுப்பணை அமைக்கப்படும். அம்மன்புரம் குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் கடம்பா புறவழிக்கால்வாய் திட்டம் 1992-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. இந்த கால்வாய் குளத்தின் உள் பகுதியிலேயே செல்லும். இதனால் கால்வாயில் மண் மூடி திட்டம் தோல்வியடைந்து விட்டது. மற்றபடி எல்லப்பநாயக்கன் குளத்துக்கு புறவழிக்கால்வாய் எதுவும் கிடையாது என்று கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், வேளாண்மை இணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) முத்துஎழில், தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.