மாவட்ட செய்திகள்

தூதூர்மட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

தூதூர்மட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊட்டி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதன்படி குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை கலெக்டரிடம் ஒப்படைக்க வந்தனர்.

பின்னர் அவர்கள் தங்கள் பகுதியில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியும் அடிப்படை வசதிகள் இல்லை. எனவே குடிநீர், நடைபாதை, சாலை உள்ளிட்ட வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுடன் திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே பாதுகாப்புக்காக போலீசார் அதிகளவில் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து தாசில்தார் தினேஷ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட இடத்தில் குன்னூர் சப்-கலெக்டர் ஆய்வு செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

குன்னூர் தாலுகா மேலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது தூதூர்மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியாகும். இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை சாலை, நடைபாதை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவும், அவசர நேரத்தில் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோத்தகிரி அருகே பெட்டட்டி அண்ணாநகரை சேர்ந்த இளைஞர்கள் கொடுத்த மனுவில், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெட்டட்டியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளனர். இவர்கள் கால்பந்து, கைப்பந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று சான்றிதழ்கள் பெற்று இருக்கிறார்கள். நாங்கள் விளையாடி வந்த இடத்தில் தற்போது விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விளையாட்டு பயிற்சிகள் பெற மைதானம் இல்லாமல் அவதி அடைந்து வருகிறோம். அதன் அருகே அண்ணாநகர் காலனியில் புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே அங்கு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஊட்டி நகர பொதுமக்கள் அளித்த மனுவில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை சாலையில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதால், நகராட்சி மார்க்கெட் மேல்பகுதி, அரசு சேட் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் நோயாளிகள், பள்ளி மாணவர்களை நாய்கள் கடிப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்