திருப்பத்தூர்,
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க வரும் காலங்களில் அலுவலகத்திற்கு முக கவசம் அணிந்து வர வேண்டும். அலுவலகத்துக்கு வந்தவுடன் தடுப்பு மருந்தை கைகளில் பூசிக்கொள்ள வேண்டும். சமூக இடைவெளியுடன் பணிகளை செய்ய வேண்டும். தற்போது இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறைகளில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் அனைத்து துறைக்கும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் இதன் மூலம் அரசு அலுவலகங்களில் கூடுவதை தடுக்கலாம். அனைத்துத் துறை அதிகாரிகளும் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டும். வருங்காலங்கள் நமக்கு சவாலானது. ஜமாபந்தி, குடிமராத்து பணிகள் உள்ளிட்டவை செய்ய வேண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வருவாய்த்துறை மிக சிறப்பாக செயல்பட்டதால் நமது மாவட்டத்தில் குறைந்த அளவு பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது. இதற்காகப் பாடுபட்டு அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர் உள்பட கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.