மாவட்ட செய்திகள்

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓமலூர்,

ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ஊராட்சி கொன்ரெட்டியூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இது தொடர்பாக காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். தற்போது விவசாய கிணறுகளும் வறண்டதால், குடிநீருக்காக சிரமப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் சரியாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்தும், குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் ஜோடுகுழி-ஓமலூர் ரோட்டில் கொன்ரெட்டியூரில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்