செய்யாறு
செய்யாறில் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலுக்கு சொந்தமான இடம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வவூர்பேட்டை பகுதியில் பட்சீஸ்வரர் கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை அப்பகுதியை சேர்ந்த செங்குந்தர் சமூகத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.
கோவிலுக்கு சொந்தமான 3.12 ஏக்கர் நிலம் வைத்தியர் தெருவில் உள்ளது. அந்த இடத்தில் வெங்கட் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த 18 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் செங்குந்தர் சமூகத்தினர் வழக்கு தொடர்ந்தனர். கோவில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
பொதுமக்கள் தர்ணா போராட்டம்
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி தலைமையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் செந்தில், விஸ்வேஸ்வரய்யா மற்றும் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றிட சன்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என நீதிமன்ற ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்கொலைக்கு முயற்சி
இதற்கிடையில் அப்பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு நீதிமன்ற ஊழியர்கள் தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்படுவதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.