தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயமும் ஒன்றாகும். ஆலயத்தில் இந்த ஆண்டு திருவிழா நாளை (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறை வட்ட அதிபர் அந்தோணி வியாகப்பன் தலைமையில் அருட்தந்தையர்கள் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறும். 12-ம் திருநாளான பிப்ரவரி 9-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. தொடர்ந்து தேர்பவனி நடைபெறும்.
13-ம் திருநாளான 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11.45 மணிக்கு மதுரை மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறுகிறது. 11-ம் தேதி காலையில் கொடியிறக்க நன்றி திருப்பலி நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை ஆலய அதிபரும், பங்குத்தந்தையுமான மோட்சராஜன், உதவி பங்குத்தந்தை சந்தியாகு, ஆன்மிக தந்தைகள் சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.