வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. நாளுக்கு நாள் அதிகரித்த வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் மதியம் 2 மணிக்கு திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.