மாவட்ட செய்திகள்

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகரில் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. பொதுவாக ஜனவரி மாதத்தில் பனி விழுந்து கடும் குளிர் நிலவும். ஆனால், இந்த வருடம் ஆரம்பம் முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

மதுரை மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. அவ்வப்போது லேசாக மழை பெய்தது. இந்த மழை நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. இதனால் மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற ஒரு உணர்வு கடந்த 3 நாட்களாக மதுரை மக்களிடையே ஏற்பட்டது. வயதானவர்கள் தொடர் மழையால் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஏற்கனவே, மதுரை மாநகர் முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், பள்ளத்தில் ரோடு இருப்பது போல காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று காலை மாவட்டம் முழுவதும் சாரல் மழை பெய்தது. 4 நாட்களாக பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. சாத்தியாறு அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை மதுரையில் மந்தமான வானிலை நிலவியது. பின்னர் மதியம் சுமார் 12.45 மணியளவில் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த சாரல் இரவு 9 மணி வரை நீடித்தது. இரவு 9 மணிக்கு பின்னர் கனமழை பெய்யத்தொடங்கியது.

இந்த கனமழையானது இரவு 10.30 மணி வரை நீடித்தது. ஆனாலும், விடிய விடிய சாரல்மழை பெய்து கொண்டிருந்தது. இதேபோல் விருதுநகர் மாவட்டத்திலும் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் மதியம் முதல் நள்ளிரவு வரையிலும் மழை நீடித்தது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, மானாமதுரை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக கண்மாய்கள், நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வரத்துக்கால்வாய் வழியாக மறுகால் பாய்கிறது. வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்திலும் ராமேசுவரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராமநாதபுரத்தில் மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலையில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழைக்கு பழைய கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. தொடர் மழை காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பொதுவாக தற்போது பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் நேற்று பொங்கல் பொருட்கள் விற்பனையில் மந்த நிலையே காணப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு