மாவட்ட செய்திகள்

பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை; வீடுகள் சேதம் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

சேடபட்டி பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேற் கூரைகள் தூக்கி வீசப்பட்டதில் வீடுகள் சேதமடைந்தன.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சேடபட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக வானில் மேகங்கள் திரண்டு வந்து பலத்த மழை கொட்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது. அவ்வப்போது லேசான சாரலுடனும், பரவலாகவும் மழை பெய்தது. இதனால் மழை பெய்தது என்ற பெயர் ஏற்பட்டதோடு முடிந்தது. தொடர்ந்து பொதுமக்கள் வெப்ப தாக்குதலாலும், தண்ணீர் சரிவர கிடைக்காமலும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேடபட்டி பகுதியில் லேசாக பெய்ய தொடங்கிய மழை, நேரம் செல்ல செல்ல பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை கொட்டியது. நீண்ட நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சி ஏற்பட்டது.

வீடுகள் சேதம்

இரவு முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்ததால், சேடபட்டி பகுதிகளில் பெரும்பாலான இடங்களின் சாலையோரங்களில் இருந்த ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

ஆவல்சேரி கிராமத்தில் ஒரு மின்கம்பம் சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. அதில் அறுந்துபோன மின்வயர்கள் அந்த பகுதியில் இருந்த வீடுகளின் மேல் விழுந்து கிடந்தன.

பலத்த சூறாவளிக்காற்றால் சில வீடுகளில் உள்ள மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதால், வீடுகள் சேதமடைந்தன.

சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் இந்த கிராமத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. இதேபோல சேடபட்டி பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களிலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதனால் கிராமங்கள் இருளில் மூழ்கின.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு