மதுரை,
மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். குடும்ப சொத்து பாகப் பிரிவினைக்காக ஒரு மாதம் சாதாரண பரோல் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. எனக்கு பரோல் வழங்க சிறைத்துறை அதிகாரிகள் மறுத்து உத்தரவிட்டுள்ளனர். எனவே எனக்கு நீண்ட நாள் அல்லது ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்னாள் பிரதமர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது. எனவே பரோல் வழங்கும்பட்சத்தில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அவரை விடுதலை செய்யக்கோரிய வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே தான் அவருக்கு பரோல் மறுக்கப்பட்டு உள்ளது. மேலும் அவரது சொத்து பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக உரிய அனுமதியுடன் சிறையிலேயே பதிவாளர் மூலம் தீர்வு காணலாம். எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
விசாரணை முடிவில் இந்த வழக்கை வருகிற 20-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.