சிக்கமகளூரு: ஒன்னள்ளி அருகே லாரியில் கடத்திய 18 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் வாகனச்சோதனை
தாவணகெரே மாவட்டம் ஒன்னள்ளி தாலுகா குந்தூர் கிராமத்தில் மாசடி வழியாக லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் ஒன்னள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக கேண்டர் லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை மடக்கி பிடித்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் லாரியில் மூட்டைகள் இருந்தது. அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது ரேஷன் அரிசி இருந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரான பிரகாசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர், போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் ரேஷன் அரிசி எங்கிருந்து, எங்கு கடத்தப்பட்டது என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
18 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
மேலும் 18 டன் ரேஷன் அரிசி மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.2.40 லட்சம் ஆகும். இதுகுறித்து ஒன்னள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான டிரைவர் பிரகாசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.