கொள்ளிடம்,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கூழையார் மீனவ கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ்(வயது35), கடலூர் மாவட்டம், புதுப்பேட்டையை சேர்ந்த கோபு(32), ராஜசேகர்(33), பிரேம்குமார்(34) ஆகிய 4 பேரும் சவுதி அரேபியாவில் ஜுபேர் என்ற இடத்தில் தங்கி கடலில் மீன் பிடித்து வந்தனர்.
சவுதி அரேபியா எல்லைப்பகுதியில் இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த மே மாதம் 20-ந் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ஈரான் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீட்க முயற்சி
ஈரான் சிறையில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட இவர்கள், ஈரான் நாட்டிலேயே தங்கி இருந்தனர். அங்கு சுமார் 75 நாட்கள் இருந்த இவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கூழையார் கிராமத்தைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன், தமிழக மீனவர்களை மீட்க முயற்சி எடுத்தார்.
தாயகம் திரும்பினர்
இதன்படி ஈரான் நாட்டில் உள்ள மீனவன் காப்போம் என்ற குழுவினரை தொடர்புகொண்ட அவர், ஈரானில் சிக்கி தவிக்கும் 4 தமிழக மீனவர்களையும் தாயகத்துக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டார். இதன் விளைவாக ஈரான் நாட்டைச் சேர்ந்த வக்கீல் ரகுமான் 4 தமிழக மீனவர்களையும் சட்டபூர்வமாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
இதன்படி ஈரான் நாட்டில் இருந்து 4 மீனவர்களும் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து அவர்கள் கொள்ளிடம் அருகே உள்ள கூழையார் கிராமத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.